மொலகால்மூரு முன்னாள் எம்.எல்.ஏ. திப்பேசாமி பா.ஜனதாவில் இணைந்தார்


மொலகால்மூரு முன்னாள் எம்.எல்.ஏ. திப்பேசாமி பா.ஜனதாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மொலகால்மூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திப்பேசாமி பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு உள்பட பலர் காவி துண்டு அணிந்து வரவேற்பு அளித்தனர்.

சிக்கமகளூரு:-

பா.ஜனதாவில் இணைந்தார்

சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. திப்பேசாமி. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று செல்லகெரே பகுதியில் நடந்த பா.ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு மற்றும் சித்ரதுர்கா பா.ஜனதா எம்.எல்.ஏ.திப்பாரெட்டி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் நேற்று திப்பேசாமி, பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு ஸ்ரீராமலு கட்சி சால்வை மற்றும் கையில் கொடி கொடுத்து வரவேற்றார்.

சீட்டு குறித்து கட்சி தலைமை முடிவு

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீராமுலு கூறியதாவது:-

திப்பசாமி தனிப்பட்ட நபர் இல்லை. ஆரம்ப காலத்தில் நானும் அவரும், பி.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி நடத்தினோம். அவர் என்னுடைய சகோதரர் போன்றவர். இன்றுவரை நாங்கள் அண்ணன் தம்பியாகத்தான் இருந்து வருகிறோம். அவரது பணி பா.ஜனதா கட்சிக்கு தேவை. பா.ஜனதா கட்சியில் பணியாற்றவேண்டும் என்ற நோக்கில்தான் அவர், முழு மனதுடன் காங்கிரசில் இருந்து விலகியிருக்கிறார்.

அவரை பா.ஜனதா கட்சி சார்பில் வரவேற்கிறேன். தொடர்ந்து பா.ஜனதாவிற்கு பணியாற்றுகிறார். இந்த சட்டசபை தேர்தலில் அவரது பங்களிப்பு இருக்கும். அதே நேரம் சித்ரதுர்கா தொகுதியில் அவருக்கு சீட்டு கிடைக்குமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தனிப்பட்ட முறையில் என்னால் இதற்கு கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பணியாற்றுவேன்

இதை தொடர்ந்து பேசிய திப்பேசாமி கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி ஒரு பலம் வாய்ந்த கட்சி. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பா.ஜனதா கட்சி தேவை. காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி எந்த பயனும் இல்லை. அதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். பா.ஜனதாவின் கொள்கை மீது பிடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. இதனால் பா.ஜனதாவில் தொடர்ந்து பணியாற்ற விரும்பினேன். இதன் காரணமாக நான் பா.ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story