பாஜகவில் இணைந்தார், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவா் சுனில் ஜாக்கா்
பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரான சுனில் ஜாக்கா் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
புதுடெல்லி,
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தது. இதையடுத்து, 'காங்கிரசின் தோல்விக்கு, முதல்-மந்திரியாக இருந்த சரண் ஜித் சன்னிதான் காரணம்' என, பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கடுமையாக விமர்சித்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கட்சித் தலைவா்கள் குறித்து அவா் தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பாக விளக்கம் அளிக்கக் கோரி, கடந்த ஏப்.11-ஆம் தேதி சுனில் ஜாக்கருக்குக் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவா் அந்த நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை. இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காங்கிரசில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டன. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.
இந்நிலையில், புதுடெல்லியில் கட்சி தலைமையகத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் பாஜகவில் இணைந்துள்ளார்.