இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு: ரஷியா மீது குற்றச்சாட்டு
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்சின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ரஷியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சானின் ராஜினாமாவை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானவர் லிஸ் டிரஸ். ஆனால் அவர் வெறும் 45 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்தார். சமீபத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமரானார்.
இந்த நிலையில் லிஸ் டிரஸ், போரிஸ் ஜான்சானின் ஆட்சியில் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது ரஷியாவை சேர்ந்த உளவாளிகள் அவரது செல்போனை 'ஹேக்' செய்து உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் வெளியுறவு கொள்கைள் குறித்து நட்பு நாடுகளுடன் லிஸ் டிரஸ் நடத்திய உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதோடு, அவரது தனிப்பட்ட உரையாடல்களும் கண்காணிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு அவரது செல்போனில் இருந்து அனைத்து அரசு சார்ந்த குறுஞ்செய்திகள் உள்பட முக்கிய தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென இங்கிலாந்து எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.