கார்கள் வாங்கி மோசடி; வாலிபர் கைது
பெங்களூருவில் போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை நிதி நிறுவனங்களில் சமர்ப்பித்து கார்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:-
வாலிபர் கைது
பெங்களூருவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்திருந்தது. அதில், தங்களது நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பணம் பெற்று, அதன்மூலம் கார்களை வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணம் பெற்று மோசடி செய்ததாக பிரதீப்குமார்(வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிதி நிறுவனத்தில் கடன்
அதாவது கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்ற பிரதீப்குமார், தான் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க போவதாக, அங்குள்ள அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்கு தேவையான நிதி உதவி வழங்கும்படியும் அவர் கேட்டுள்ளார். பின்னர் தன்னுடைய டிராவல்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வீட்டு சொத்து பத்திரங்களையும் நிதி நிறுவனத்திடம் அவர் கொடுத்திருந்தார். அந்த ஆவணங்கள்படி பிரதீப்குமாருக்கு கடன் கொடுத்து, 6 கார்களை வாங்கி கொடுத்திருந்தனர்.
அதன்பிறகு, நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை செலுத்தாமல் பிரதீப்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை பற்றிய எந்த தகவலும் நிதி நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. நிதி நிறுவனத்திற்கு வழங்கிய ஆவணங்களின்படி அவரது டிராவல்ஸ் நிறுவனத்திற்கும், வீட்டுக்கும் சென்ற போது, அங்கு பிரதீப்குமார் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தவில்லை என்றும், அவருக்கு சொந்த வீடு ஏதும் இல்லை என்பதும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து கடன் வாங்கி கார்களை வாங்கியதும் தெரியவந்தது.
ஐதராபாத்தில் விற்பனை
இதுபற்றி பெங்களூருவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் நிதி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது நிதி நிறுவனத்தின் மூலமாக வாங்கிய கார் ஒன்று, சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டு இருப்பது பற்றிய தகவல் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது.
அதாவது பெங்களூருவில் வாங்கிய கார், ஐதராபாத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி நிதி நிறுவனத்திற்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். உடனடியாக அந்த தகவலை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, நிதி நிறுவன மேலாளரான மோகன்குமார் கூறினார்.
ரூ.80 லட்சம் மதிப்பிலான கார்கள்
அதைத்தொடர்ந்து, ஐதராபாத்திற்கு சென்ற போலீசார், பிரதீப்குமாரை கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தான் நிதி நிறுவனங்களில் போலி ஆவணங்களை கொடுத்து, கடன் பெற்று கார்களை வாங்கியதுடன், அதனை விற்று பணம் சம்பாதித்ததை ஒப்புக் கொண்டார்.
பிரதீப்குமார் கொடுத்த தகவலின் பேரில் 7 கார்கள், போலி ஆவணங்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் பிரதீப்குமாருக்கு உதவிய 2 பேர் தமைறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.