முறைகேடாக 'ஏ' பிரிவு சான்றிதழ்கள் பெற்று மோசடி:
முறைகேடாக ‘ஏ’ பிரிவு சான்றிதழ்கள் பெற்று மோசடி செய்த 696 சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு:-
சொத்து வரி
பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகள், வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சில குடியிருப்புகள், வீடுகளுக்கு சட்ட
விரோதமாக "ஏ" பிரிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இது வருவாய் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏ பிரிவு சான்றிதழ் கொண்ட வீடு அல்லது கட்டிடத்திற்கு சுலபமாக பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்ற கொள்ளலாம்.
அதற்காக 'பி' பிரிவு கொண்ட வீட்டுமனைகளுக்கு சட்டவிரோதமாக 'ஏ' பிரிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 2 வார்டுகளில் ஒட்டுமொத்தமாக 696 செத்துக்களின் உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைகேடாக 'ஏ' பிரிவு சான்றிதழ்கள்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பெங்களூருவில் உள்ள குடியிருப்புகள், வீடுகளின் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக 'ஏ' பிரிவு சான்றிதழ்களை வாங்கி உள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக 696 சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் வார்டு 194-ல், 357 சொத்துக்களும், வார்டு 196-ல் 341 சொத்துக்களும் அடங்கும். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்துக்களுக்கு முறைகேடாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.