டெல்லியில் இலவச ஆங்கிலம் பேசும் பயிற்சி திட்டம்; கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் இளம் தலைமுறையினர் தகவல் தொடர்பு திறன் பெறுதல் மற்றும் பணி வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் நோக்கில் இலவச ஆங்கிலம் பேசும் திட்டம் ஒன்றை கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, டெல்லி மக்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டெல்லியில் உள்ள லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் மொஹல்லா கிளினிக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் ஏழை, எளிய மக்கள் சுகாதார வசதிகளை பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று, 200 யூனிட் வரை இலவச மின்சாரமும் மக்களுக்கு கிடைக்க பெறுகிறது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 200 முதல் 400 யூனிட் மின்சாரத்திற்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற மக்களுக்கு பயன் அளிக்க கூடிய திட்டங்களை பஞ்சாப்பில் சமீபத்தில் ஆட்சியை பிடித்த பின்னர், ஆம் ஆத்மி அமல்படுத்தி வருகிறது. பஞ்சாப்பிலும், இலவச மின்சாரம், வீடு தேடி ரேசன் திட்டம் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
டெல்லியில் தரமுள்ள இலவச கல்வி லட்சக்கணக்கானோருக்கு கிடைக்கவும் அரசு முயற்சிகளை எடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில், கெஜ்ரிவால் டெல்லியில் புதிய திட்டம் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதன்படி, வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் மேம்பட்ட தகவல் தொடர்பு திறன் பெறுதல் மற்றும் பணி வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் நோக்கில் இலவச ஆங்கிலம் பேசும் பயிற்சி திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளார்.
இந்த திட்டத்தின்படி, 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் முன்வைப்பு தொகை ரூ.950 செலுத்தி பயன் பெறலாம். இந்த முன்வைப்பு தொகையும், படிப்பை வெற்றியுடன் முடித்ததும் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி திறன் முனைவோர் பல்கலை கழகம் இந்த பாடதிட்டத்தினை வழங்கும். இதனால், தகவல் தொடர்பு திறன் குறைந்த இளம் தலைமுறையினர் பயன் பெறுவார்கள். 12ம் வகுப்பு படித்து, முடித்த மாணவர்கள் இதனை தேர்வு செய்யலாம். வேலை தேடுவதில் சிக்கல் உள்ளவர்கள், 8ம் வகுப்பு வரை ஆங்கில அடிப்படையறிவு கற்றவர்களும் இந்த பாடதிட்டத்தில் சேரலாம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
முதல் கட்ட திட்டத்தின்படி, டெல்லி முழுவதும் 50 மையங்களில் 1 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். ஓராண்டு கொண்ட இந்த பயிற்சியானது, இதன்பின்னர் விரிவுபடுத்தப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.