அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்: கர்நாடக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தொடங்கிய கர்நாடக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பள்ளி-
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தொடங்கிய கர்நாடக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு திட்டம்
கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை கடந்த 11-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதனால் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் அரசு பஸ்களில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் தனியார் பஸ், ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் மாநில அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் நீலிஜன் சாலையில் இருந்து தாசில்தார் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.
போராட்டம்
பின்னர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தாசில்தார் சசீதரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தால் ஆட்டோ டிரைவர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது..
இந்த திட்டத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதாவது, டவுன் பகுதியில் இருந்து 25 கி.மீ. தூரத்திற்கு அப்பால் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குடும்பம் நடத்துவதற்கு பணம் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இதனால் எங்கள் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மாநில அரசு செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வருவாய் இல்லாமல் தவிப்பு
இதேபோல சிக்கமகளூரு மாவட்டத்திலும், மாநில அரசின் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச தி்ட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது பெண்கள் வெளியே செல்லவேண்டும் என்றால் ஆட்டோவைத்தான் நாடினார்கள். தற்போது அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பெண்களும் அரசு பஸ்களிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர்.
ஆட்டோக்களை நாடுவது இல்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக சவாரிக்காக ரெயில், பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஒரே நேரத்தில் அனைத்து ஆட்டோக்களும் வந்து நிற்பதால், சவாரிகள் கிடைக்காமல் வெறும் கையுடன்தான் வீட்டிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதேநிலை நீடித்தால் குழந்தைகளை படிக்க வைக்கவும், குடும்பம் நடத்தவும் முடியாது. எனவே மாநில அரசு ஆட்டோ டிரைவர்களின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு இதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.