பெண் குழந்தை பிறக்காததால் விரக்தி: பச்சிளம் ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்


பெண் குழந்தை பிறக்காததால் விரக்தி: பச்சிளம் ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:30 AM IST (Updated: 31 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தை பிறக்காததால் பச்சிளம் ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு;

2-வது திருமணம்

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா போலீஸ் எல்லைக்குட்பட்ட கூட்குஞ்சா கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு துமகூரு மாவட்டம் ஷிரா தாலுகாவை சேர்ந்த மணிகண்டா என்பவரை பவித்ரா 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பவித்ரா கர்ப்பமாகினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கடபாவில் உள்ள தாய் வீட்டுக்கு பவித்ரா சென்றார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பவித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பவித்ராவை, அவரது குடும்பத்தினா் கடபா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை கொலை

பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பவித்ரா, ஆண் குழந்தை பிறந்ததால் வேதனை அடைந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் பவித்ராவை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே சென்றார்.

இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற பவித்ரா, தனது மனதை கல்லாக்கிக் கொண்டு பச்சிளம் குழந்தையை கிணற்றுக்குள் தூக்கி வீசினார். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள், பச்சிளம் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தாயிடம் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுப்பிரமணியா போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரித்தனர். அப்போது பெண் குழந்தை பிறக்காத விரக்தியில் பெற்ற தாயே ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பவித்ராவை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து சுப்பிரமணியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் குழந்தை பிறக்காததால், ஆண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story