பெங்களூருவில் முழுஅடைப்பு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெங்களூரு:-
பெங்களூருவில் முழுஅடைப்பு
பெங்களூரு சுதந்திர பூங்காவில் கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்துகொண்டன. அப்போது காவிரி நீர் விவகாரத்தில் அடுத்தகட்டமாக நடத்த வேண்டிய போராட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தான் பெங்களூருவில் முழுஅடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் விவசாய சங்க தலைவர் குருபூரு சாந்தகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பிரமாண்ட ஊர்வலம்
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக உரிமைக்காக போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவில் வருகிற 26-ந் தேதி (நாளை மறுநாள்) முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் காலையில் டவுன்ஹாலில் இருந்து மைசூரு வங்கி வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. காவிரி பிரச்சினைக்காக நடக்கும் இந்த முழுஅடைப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வருகிற 26-ந் தேதி பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு காரணமாக தமிழ்நாட்டுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகளும், பெங்களூருவுக்கு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
100 அமைப்புகள் ஆதரவு
மாநிலத்தில் இந்த ஆண்டு மழை குறைவு காரணமாக 195 தாலுகாக்கள் வறட்சி பாதித்ததாக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் மழை குறைவாக பெய்திருப்பதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு, இங்குள்ள நிலைமையை பரிசீலித்து சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் என 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு வாடகை கார்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக சினிமா வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன.
கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்பு?
கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், பெங்களூருவில் முழு அடைப்பு நடத்துவதற்கு பதில் கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுபற்றி நாளை (திங்கட்கிழமை) தனது முடிவை தெரிவிப்பதாக வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். இதையடுத்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் தலைவர்களுடன் பெங்களூருவில் நேற்று மாலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், முதலில் பெங்களூருவில் முழு அடைப்பை நடத்திவிட்டு, அதன்பிறகு மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு நடத்தலாம் என்று வாட்டாள் நாகராஜிடம் பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன.