ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.28,000 கோடி பயன்படுத்த அனுமதி
ஆதிதிராவிடர்கள், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு இருபத்து எட்டு ஆயிரம் கோடி ரூபாய் நிதி பயன்படுத்த அனுமதி அளித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மாநில வளர்ச்சி கவுன்சில் கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், சட்டத்துறை மந்திரி மாதுசாமி, போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடக பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை நடப்பு ஆண்டிற்குள் பயன்படுத்த அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி செலவில் அம்பேத்கர் சுற்றுப்பயணம் செய்த இடங்களை மேம்படுத்தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் அந்த சமூகங்களை சேர்ந்தவர்களை உறுப்பினராக சேர்க்க ரூ.203 கோடி, வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் வழங்க ரூ.3,748 கோடி, திறன் மேம்பாட்டிற்கு ரூ.180 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் வாரியங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும். கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.9 ஆயிரம் கோடி செலவு செய்யப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.