ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள்-ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கூட்டம்


ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள்-ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கூட்டம்
x

ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள்-ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கூட்டம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் பெங்களூருவில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

பெங்களூரு:-

நிதி மந்திரிகள்-கவர்னர்கள்

ஜி20 நாடுகள் சபையின் நிதி மந்திரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கூட்டம் பெங்களூருவில் வருகிற 22-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 72-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

21-வது நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள பன்முக வங்கிகளை ஏற்படுத்துதல், எதிர்கால நகரங்களை உருவாக்க நிதி உதவி அளித்தல், டிஜிட்டல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. உலக பொருளாதாரம், உலக சுகாதாரம், சர்வதேச வரி அமைப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இயற்கை காட்சிகள்

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள், தேசிய பணம் செலுத்தும் நடைமுறையின் பங்கு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இந்தியாவின் கலாசாரத்தை பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 'வாக் த டாக்' என்ற நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்கள் இந்திய அறிவியல் கழகத்திற்கு நேரில் சென்று அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்கள். வருகிற 26-ந் தேதி கர்நாடகத்தில் உள்ள இயற்கை காட்சிகள்-சூழல்களை நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகள் சபையில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் சபையின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story