விநாயகர் சிலை ஊர்வலங்கள் மாலை 6 மணிக்குள் முடிந்துவிட வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


விநாயகர் சிலை ஊர்வலங்கள் மாலை 6 மணிக்குள் முடிந்துவிட வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x

சிக்கமகளூரு மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் மாலை 6 மணிக்குள் முடிந்துவிட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகாவிற்கு உட்பட்ட கடலைமக்கி கிராமத்திற்கு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் வந்தார். அவர் அங்கு பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி 199 பேர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரியுள்ளனர். விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விரும்புவோர் போலீஸ் துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் முறையாக அனுமதி பெற வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியின்போது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலங்களை மாலை 6 மணிக்குள் முடிந்துவிட வேண்டும். ஊர்வலத்தில் ஈடுபடுபவர்கள் சர்ச்சைக்குரிய வகையிலோ, கலவரத்தை தூண்டும் வகையிலோ கோஷங்கள் எழுப்ப கூடாது.

மட்கா சூதாட்டத்தை தடுக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து சிக்கமகளூருவிற்கு வந்து தங்கி உள்ளவர்களை கணக்கெடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story