வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற கேரள மாணவர்கள் உள்பட 4 பேர் சிக்கினர்
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த கேரள மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதநாயக்கனஹள்ளி:
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த கேரள மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 பேர் கைது
பெங்களூருவில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் நடக்கிறது. அவற்றை பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் கூடுதல் விலைக்கு மர்மகும்பல் விற்பனை செய்து வருகின்றன. இதில் வெளிநாட்டினர் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக கேரளாவை சேர்ந்த மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருட்கள் விற்பனை நடப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
கேரள மாணவர்கள்
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சலின்(வயது 23), பத்தனம்திட்டாவை சேர்ந்த ஆகாஷ் வினாயன்(22) மற்றும் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகாவை சேர்ந்த ரகு(29) என்பதும் தெரிந்தது. இதில் சலின், ஆகாஷ் வினாயன் இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், விடுதி ஒன்றில் தங்கி இருப்பதும் தெரிந்தது.
மேலும் அவர்கள் டிரைவர் ரகு உதவியுடன் கஞ்சாவை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 12 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் நைஜீரியாவை சேர்ந்தவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி விற்றது தெரிந்தது. அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து...
இதேபோல் நெலமங்களா போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சலீம் பாஷா(வயது 32) என்பதும், அவர் ஒடிசா, ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, பெங்களூருவில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவாகி இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து சலீம் பாஷாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக கஞ்சா விற்பனை செய்ததாக மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.