கியாஸ் சிலிண்டர் வினியோக கட்டணம் ஒழுங்குபடுத்தப்படுமா?; இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு


கியாஸ் சிலிண்டர் வினியோக கட்டணம் ஒழுங்குப்படுத்தப்படுமா என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூரு:


கியாஸ் சிலிண்டர் வினியோக கட்டணம் ஒழுங்குப்படுத்தப்படுமா என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

கியாஸ் அடுப்பு பயன்பாடு

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் (சமையல் எரிவாயு) தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கி வருகிறது. விறகு அடுப்புகளில் சமையல் செய்த காலம் தற்போது மலையேறி விட்டது. காபி, டீ தயாரிக்கவும், வெந்நீர் சூடு வைக்கவும் கூட தற்போது அனைத்து வீடுகளிலும் கியாஸ் அடுப்புகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில வீடுகளில் கியாஸ் சிலிண்டர்கள் காலியாகி போனால் பரிதவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக கியாஸ் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது.

தற்போது கர்நாடகத்தில் ஒரு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,050 ஆகும். கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது மக்களிடையே குறிப்பாக இல்லத்தரசிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ் விலை உயரும் போது எல்லாம் மீண்டும் விறகு அடுப்புக்கே சென்று விடலாம் போல இருக்கிறது என்று இல்லத்தரசிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இல்லத்தரசிகள் விறகு அடுப்புக்கு மீண்டும் செல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் வருகிறது.

பணம் கொடுக்க தேவை இல்லை

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், அந்த கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்பவர்கள் சிலிண்டர்களை வினியோகம் செய்ய பணம் வாங்கி வருகின்றனர். 3-வது மாடியில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர்களை தூக்கி சென்றால் ரூ.50 வரை வாங்கி செல்கின்றனர். தரைதளத்தில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்ய ரூ.30 வரை வாங்குகின்றனர்.

ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் அதிர்ச்சியில் உள்ள இல்லத்தரசிகளுக்கு, கியாஸ் சிலிண்டரை வினியோகம் செய்பவர்களுக்கு பணம் வழங்குவது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்பவர்கள் பணம் கேட்பது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதி கூறுகையில், கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறி இருந்தார். ஆனாலும் சிலிண்டர் வினியோகம் செய்பவர்கள் பணம் வாங்கி தான் வருகின்றனர்.

தாமதமாக வினியோகம்

இதுகுறித்து பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய கருத்து விவரம் பின்வருமாறு:-

பேகூரை சேர்ந்த அமராவதி:-

"இன்றைய காலக்கட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வீடுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அப்படி இருக்கும் போது கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்பவர்களும் ரூ.30 முதல் ரூ.50 வரை வாங்கி செல்கின்றனர்.

கூடுதல் பணம் தர மாட்டோம் என்று கூறினால் மறுமுறை சிலிண்டர் பதிவு செய்யும் போது தாமதமாக வினியோகம் செய்கிறார்கள். சிலிண்டர் இல்லாமல் வீட்டில் எதுவும் செய்ய முடியாது. இதனால் வேறு வழியின்றி வினியோகம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்" என்றார்.

லிப்ட்டில் வந்து கொடுப்பதற்கு எதற்கு பணம்?

எலகங்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமி:- "நான் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு சிலிண்டர் வினியோகம் செய்ய வருபவர் ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வினியோகம் செய்துவிட்டு ரூ.50 வாங்கி செல்கிறார். அவர் படிக்கட்டுகளில் ஏறி வந்து வினியோகம் செய்தால் கூட ரூ.50 கொடுப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் லிப்ட்டில் வந்து தான் வினியோகம் செய்கிறார். அவருக்கு எதற்கு ரூ.50 என்று தெரியவில்லை. ஒரு சிலர் கறாராக பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் மீது சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

என்ன கஷ்டமோ தெரியவில்லை

சாம்ராஜ்பேட்டையில் வசித்து வரும் புவனேஸ்வரி:- "கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்களை போல நடுத்தர குடும்ப பெண்கள் மாதந்தோறும் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டி உள்ளது. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வருபவர்களும் பணம் கேட்கிறார்கள். அவர்களுக்கு கொடுத்து தான் ஆக வேண்டி உள்ளது.

கொடுக்கவில்லை என்றால் அடுத்த முறை சிலிண்டர் வினியோகம் செய்ய தாமதம் செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன கஷ்டமோ என்று தெரியவில்லை. சிலிண்டர் வினியோக முறையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தினால் நன்றாக இருக்கும்" என்றார்.

கியாஸ் சிலிண்டர் வினிேயாகிப்பாளர்கள் சொல்வது என்ன?

கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்பவர்கள் பணம் கேட்கிறார்கள் என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில், கியாசை வினியோகம் செய்யும் பாலா என்பவர் கூறியதாவது:-

நான் எனது ஆட்டோ மூலம் தான் வீடு, வீடாக சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறேன். எனது சொந்த பணத்தில் இருந்து ஆட்டோவுக்கு டீசல் போடுகிறேன். ஆட்டோவுக்கு டீசல் போட கியாஸ் நிறுவனம் பணம் தருவது இல்லை. எனக்கு சம்பளமும் கிடையாது. கியாஸ் நிறுவனத்தில் மதிய உணவு தருகிறார்கள். அந்த உணவையும் கூட சாப்பிட நேரம் கிடைப்பது இல்லை. ஒரு சிலிண்டர் வினியோகம் செய்தால் ரூ.7 கமிஷன் என்று கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு 10 சிலிண்டர் வினியோகம் செய்தால் கூட ரூ.70 தான் கிடைக்கிறது. ரூ.70 வைத்து டீசல் போட முடியுமா?. அடுக்குமாடிகளில் உள்ள வீடுகளுக்கு சிலிண்டரை தூக்கி சென்று வினியோகம் செய்து வருகிறோம். வினியோகம் செய்ய நாங்கள் வாங்கும் கட்டணம் தான் எங்களது சம்பளம். வேறு எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. நாங்கள் என்ன செய்வது?.

நாங்கள் வேலை செய்யும் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களில் இருந்து எங்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படுவது இல்லை. எங்களுக்கு சம்பளமே கிடையாது. ஒரு சிலிண்டரை வினியோகம் செய்தால் ரூ.7 தருவதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த ரூ.7-ம் எங்களுக்கு கிடைப்பது இல்லை. எங்கள் வாழ்வாதாரத்தை நடத்த நாங்கள் என்ன செய்வது?. நாங்கள் யாரிடமும் பணம் கண்டிப்பாக தர வேண்டும் என்று கேட்பது இல்லை. பெரும்பாலானோர் பணம் கொடுப்பது இல்லை. நாங்களும் கேட்பது இல்லை. சிலர் 4 அல்லது 5 மாடியில் வசிக்கிறார்கள். சிலிண்டர்களை மாடி வீடுகளுக்கு தூக்கி செல்கிறோம். எங்களுக்கு கொடுக்கும் ரூ.50-ஐ ஒரு சன்மானம் போல நினைத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story