வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து
பண்ட்வால் பகுதியில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் நாசமானது.
மங்களூரு:
கியாஸ் சிலிண்டர்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கபிகாட் பகுதியை சேர்ந்தவர் ராம அசோக் பூஜாரி. இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராம அசோக் பூஜாரி வேலை விஷயமாக வெளியே சென்றார். அப்போது அவரது தாய் மட்டும் வீட்டில் தனியார் இருந்தார். இதற்கிடையே அவர் அவரது தாய் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.
அந்த சமயத்தில் திடீரென அவரது வீட்டில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. அதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவர்கள் வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். தீவிபத்து குறித்து புத்தூர், பண்ட்வால் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களுக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே தீவிபத்தின்போது பயங்கர சத்தத்துடன் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கு இரையானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.
மின்கசிவு
இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில், வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதும், அப்போது அங்கிருந்த 2 சமையல் கியாஸ் சிலிண்டர்களில் ஒன்று வெடித்து சிதறியது தெரிந்தது. ஆனால் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் நாசமானது.