5 பேர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த பெண் - திடுக்கிடும் தகவல்
தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறியது பொய் என்று தெரியவந்துள்ளது.
லக்னோ,
டெல்லியை சேர்ந்த பெண் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு சென்றபோது 5 பேரால் கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் எனவும் தகவல் வெளியானது. கடந்த புதன்கிழமை இந்த செய்தி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறியது பொய் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணுக்கும் வேறு சிலருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பந்தப்பட்ட நிலத்தை அபகரிக்க அப்பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நாடகம் ஆடியுள்ளார்.
தனது எதிர் தரப்பை சேர்ந்த 5 பேரையும் சிக்கவைக்க கூட்டு பாலியல் வன்கொடுமை நாடகமாடியுள்ளார். தனது எதிர் தரப்பை சேர்ந்த 5 பேரும் தன்னை கடத்தி 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரத்தில் ஈடுபட்டதாக போலீசில் போலியாக புகார் அளித்துள்ளார்.
ஆனால், அந்த பெண்ணின் நாடகத்தை கண்டறிந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணை நேற்று கைது செய்தனர். கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தனது கூட்டாளிகளான கவுரவ், அசாத், அப்சல் ஆகியோருடன் சேர்ந்து பொய்யாக கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சமீனாவை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 4 பேரும் சிறையில் அடைத்தனர்.
சொத்தை அபகரிக்க 5 பேர் மீது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.