இரவில் காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்... திருமணம் செய்து வைத்த பொதுமக்கள்...!
கிராமத்தில் அடிக்கடி இரவு மின்சாரம் தடைபட்டுள்ளது....இளம்பெண்ணை அவரது காதலனுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் பெடிஹா கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து கிராமத்தினர் பல முறை மின்வாரிய அதிகாரிகளுடன் புகார் அளித்துள்ளனர். ஆனாலும், இரவு மட்டும் தொடர்ந்து மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மின் தடைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய வேண்டுமென களத்தில் இறங்கினர்.
அந்த வகையில் வழக்கம் போல் இரவு மின் தடை ஏற்பட்ட நிலையில் கிராமத்தில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததை கிராமத்தினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த இளைஞரையும் இளம்பெண்ணையும் சுற்றி வளைத்தனர்.
அப்போது, அந்த இளம்பெண் அதேகிராமத்தை சேர்ந்த பிரீத்தி என்பதும் இளைஞர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜ்குமாரை கிராமத்தினர் சரமாரியாக தாக்கினர். அப்போது, ராஜ்குமாரை தாக்க வேண்டாமென பிரீத்தி தடுத்துள்ளார்.
மேலும், தான் ராஜ்குமாரை காதலிப்பதாகவும் அவரை இரவில் சந்திக்கவே கிராமத்தில் மின் இணைப்பதை துண்டித்ததாகவும் பிரீத்தி தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இரு கிராமத்தினரும் இணைந்து ராஜ்குமாருக்கும் பிரீத்திக்கும் திருமணம் செய்து வைத்தனர்.