இளம்பெண் கத்தியால் குத்தி கொலை
புத்தூர் தாலுகாவில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு:-
பட்டதாரி பெண்
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா முந்தூர் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 23). இவர் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடி வேலை தேடி வந்தார். இதேபோல் கனகமஜலு பகுதியை சேர்ந்தவர் உமேஷ். இவருக்கும், ஜெயஸ்ரீக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் ஜெயஸ்ரீயை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தனது காதலை அவரிடம், உமேஷ் கூறி உள்ளார். அப்போது அதற்கு ஜெயஸ்ரீ மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவரை விட்டு விலக தொடங்கி உள்ளார். முன்னதாக உமேஷ், ஜெயஸ்ரீ வீட்டிற்கு அவ்வப்போது நட்பு அடிப்படையில் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கிரிஜா அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில்...
அப்போது ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு கிரிஜா வந்தபோது, ஜெயஸ்ரீ கத்தி குத்து காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிரிஜா, உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு புத்தூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதை கேட்டு கிரிஜா கதறி அழுதார். இதற்கிடையே புத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சரமாரி கத்திக்குத்து
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில்
தனியாக இருந்தபோது, அதுகுறித்து அறிந்த மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து ஜெயஸ்ரீயை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
ஒருதலை காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் உமேஷ், ஜெயஸ்ரீயை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் உமேசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் ஜெயஸ்ரீயை கொலை செய்தது தெரிந்தது. காதலை ஏற்க மறுத்ததால், வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அவரிடம் இருத்து கத்தி, ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.