கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் தாருங்கள்; பல்லாரி கூட்டத்தில் அமித்ஷா வேண்டுகோள்


கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் தாருங்கள்; பல்லாரி கூட்டத்தில் அமித்ஷா வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் தாருங்கள் என்று பல்லாரி கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

அமித்ஷா வருகை

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் முகாமிட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் சண்டூரில் நேற்று பா.ஜனதாவின் விஜயசங்கல்ப யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து நேற்று மதியம் உப்பள்ளிக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்தார்.

பின்னர் அங்கிருந்து பல்லாரி மாவட்டம் சண்டூருக்கு அமித்ஷா ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அங்குள்ள எஸ்.ஆர்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற விஜய சங்கல்ப யாத்திரையில் அமித்ஷா பங்கேற்றார். பின்னர் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

தனிப்பெரும்பான்மை பலம்

கர்நாடக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைத்தால், தென்னிந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பான அரசு செயல்பட்டு வருவதால், நாட்டை இணைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு நீங்கள் ஓட்டுப் போட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு சென்று விடும்.

முதல்-மந்திரி பதவிக்கு போட்டி

காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார். குடும்ப அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், ஊழலிலும் மூழ்கி விட்டார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகளால் நாட்டின் வளர்ச்சி, மக்கள் பணிகளில் ஈடுபட சாத்தியமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசால், பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல கூட முடியாமல் போனது. பா.ஜனதா ஆட்சியில் தான் துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.

ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். பா.ஜனதாவுக்கு மாநில மக்கள் அபாரமான ஆதரவு அளித்து வருவது, இங்கு கூடி இருக்கும் மக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்நாடகத்தில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சாத்தியமில்லை.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story