உ.பி. மதவழிபாட்டு தலத்தில் அரிவாள் கொண்டு தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை


உ.பி. மதவழிபாட்டு தலத்தில் அரிவாள் கொண்டு தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை
x

உத்தரபிரதேசத்தில் மதவழிபாட்டு தலத்தில் அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இந்து மத வழிபாட்டு தலமான கோரக்நாத் கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தின் தலைமை பூசாரியாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளார்.

இதனிடையே, இந்த வழிபாட்டு தலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி அரிவாளுடன் வந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த வழிபாட்டு தலத்திற்கு ஏப்ரல் 4-ம் தேதி உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்த வரவிருந்த நிலையில் முன் தின நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

அரிவாளால் தாக்குதல் நடத்திய நபரை அங்கிருந்த போலீசார், பக்தர்கள் உதவியுடன் பிடித்தனர். தாக்குதல் நடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதல் நடத்தியது கெமிக்கல் இன்ஜினியரான அகமது முர்தசா அப்பாஸ் என்பதும் அவர் ஐ.எஸ். பயங்கரவாதி என்பதும் அந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதி அகமது முர்தசா அப்பாசை என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பயங்கரவாதி அகமது ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக போராட உறுதிமொழி எடுத்ததும் அந்த அமைப்பிற்கு நிதி உதவி வழங்கியதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு, பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி, இந்து மத வழிபாட்டு தலம் மீது பயங்கரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் பயங்கரவாதி அகமது முர்தசா அப்பாஸ் மீது என்.ஐ.ஏ. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் போது அகமது முர்தசா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அகமது மனநலம் பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் தெரியவந்து.

வழக்கு விசாரணையில் அகமது முர்தசா அப்பாஸ் ஐ.எஸ். பயங்கரவாதி என்பதும் வழிபாட்டு தலம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தியதும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் அகமதுவுக்கு தொடர் இருப்பது உறுதியானது.

இதையடுத்து பயங்கரவாதி அமகது முர்தசா அப்பாசுக்கு தூக்கு தண்டனை விதித்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story