கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் 'கிளினிக்' நடத்த தடை


கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை
x

கர்நாடகத்தில் அரசு டாக்டர்கள் கிளினிக் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நிர்வாக சீர்திருத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

பெங்களூரு:-

சீர்திருத்த அறிக்கை

கர்நாடக அரசு நிர்வாக சீர்திருத்த குழு தனது 4, 5-வது அறிக்கைகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நேற்று பெங்களூருவில் வழங்கியது. அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் விவரம் வருமாறு:-

கா்நாடகத்தில் 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 3 ஆயிரத்து 457 தொடக்கப்பள்ளிகளை ஒருங்கிணைத்து 1,667 பள்ளிகளாக உருவாக்க வேண்டும். 25 மாவட்டங்களில் 737 கால்நடை ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 154 கால்நடை ஆஸ்பத்திரிகளை பற்றாக்குறையாக உள்ள பெலகாவி, கொப்பல், ராய்ச்சூர், பல்லாரி ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

'கிளினிக்' நடத்த தடை

அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் தனியாக 'கிளினிக்' நடத்த தடை விதிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் மாலை நேரங்களிலும் புறநோயாளிகள் பிரிவை தொடங்க வேண்டும். பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பை தடுக்கும் நோக்கத்திலும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிரிக்கவும் தற்போது அரசு பள்ளிகளில் வாரத்திற்கு 2 முட்டை வழங்கப்படுகிறது.

இதை வாரத்தில் 5 முட்டைகள் என்று வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்கள் முதுநிலை படிப்பு படிக்க ஆண்டுக்கு 10 சதவீத சிறப்பு மதிப்பெண் வழங்கலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக 30 சதவீத சிறப்பு மதிப்பெண்கள் வரை வழங்கலாம். கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி.யில் தேர்ச்சி சதவீதம் தென்இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

மருத்துவ கல்லூரிகள்

அதனால் மாணவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும். ஆண்டு இறுதி தேர்வுகளில் 20 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7½ சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும்.

பெங்களூரு மாநகராட்சியில் 30 வருவாய் மண்டலங்களை உருவாக்கி அவற்றுக்கு 30 கே.ஏ.எஸ். அதிகாரிகளை துணை கமிஷனர்களாக நியமனம் செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு படி மாதம் ரூ.83-ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு பணிகளுக்கான படியையும் உயர்த்த வேண்டும்.

சொத்துவரி

கர்நாடக அரசு மருத்துவ கல்லூரிகளில் என்.ஆர்.ஐ. (நான் ரெசிடென்ட் இன்டியன்) அதாவது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்கலாம். இதில் சேருகிறவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்து அதை அந்த கல்லூரியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படும் சொத்துவரி மீது 1 சதவீதம் விளையாட்டு வரி விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story