கோலார் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் குழு திடீர் ஆய்வு


கோலார் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் குழு திடீர் ஆய்வு
x

கோலார் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் குழுவினர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நோயாளிகளிடம் அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.

கோலார் தங்கவயல்

கோலார் அரசு ஆஸ்பத்திரியில் நீதிபதிகள் குழுவினர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நோயாளிகளிடம் அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.

கோர்ட்டு வளாகம்

கோலார் மாவட்ட நீதிபதியாக இருந்து வருபவர் நாகராஜ். இவரது தலைமையில் நேற்று நீதிபதிகள் குழுவினர் கோலார் தங்கவயலில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, சிறுவர் சீர்திருத்த பள்ளி, அரசு மாணவ-மாணவிகள் விடுதிகள், சிறை, கோர்ட்டு வளாகம் ஆகிய இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மாணவ-மாணவிகள் விடுதிகளில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், விடுதி கட்டிடங்களை புனரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்ய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அதேபோல் சீர்த்திருத்த பள்ளியில் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.

நீதிபதிகள் குழு

பின்னர் விடுதியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மத்திய உணவு குறித்து கேட்டறிந்தனர். மேலும் விடுதிகளில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து நீதிபதிகளுடன் சேர்ந்து, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு நீதிபதி நாகராஜ் சென்றார். அவர் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர் சுரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். பின்னர் நீதிபதிகள் குழுவினர், நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். நீதிபதிகள் குழுவினர், திடீரென ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியதால் அரசு அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆய்வில் நீதிபதிகள் கணபதிசித்தபாதமி, மகேஷ்பட்டீல், மஞ்சுநாத், வினோத்குமார், மஞ்சு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஆய்வின்போது வக்கீல்கள் சங்கத்தினரும் உடன் இருந்தனர்.


Next Story