கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்க சிலரிடம் இளம்பெண்கள் படுக்க வேண்டும்; காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் அரசு வேலை கிடைக்க, இளம்பெண்கள் சிலரிடம் படுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.
கலபுரகி,
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால், பணி நியமன ஊழல்களை விசாரிக்க நீதிமன்ற விசாரணை அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு, விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இளம்பெண்கள் அரசு பதவிகள் கிடைக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் எவரேனும் சிலரது படுக்கையில் உடன் படுக்க வேண்டும். ஆண்கள் என்றால் அரசு பதவிகளை பெற லஞ்சம் கொடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் மந்திரி ஒருவர், அரசு வேலைக்கு இளம்பெண் ஒருவரை தன்னுடன் படுக்கும்படி கூறியுள்ளார். ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததும், அவர் பதவியில் இருந்து விலகி விட்டார். நான் கூறியதற்கு இதுவே சான்று என கூறியுள்ளார்.
இதேபோன்று, கர்நாடகாவின் மின்பரிமாற்ற கழகத்தில் நடந்த 1,429 பதவிகளுக்கான நியமனத்தில் மொத்தம் 600 பதவிகளுக்கு டீல் பேசப்பட்டு உள்ளன. உதவி பொறியாளர் பணிக்கு ரூ.50 லட்சம், இளநிலை பொறியாளர் பணிக்கு ரூ.30 லட்சம் பணம் பெற்றுள்ளனர். இதில், ரூ.300 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டு உள்ளது என்று கார்கே கூறியுள்ளார்.
இதுபோன்று ஒவ்வொரு பதவிக்கான தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றால், ஏழை மற்றும் திறமையான மாணவ மாணவிகள் என்ன செய்வார்கள்? ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோதும், தங்களை எதுவும் செய்ய முடியாது என சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு நன்றாக தெரியும்.
இதனால், கர்நாடக மின்பரிமாற்ற கழக பதவிகளுக்காக விண்ணப்பித்திருந்த 3 லட்சம் மாணவர்களின் வருங்காலத்துடன் அரசு விளையாடி கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.