3 நாட்களில் சேவையை நிறுத்த அரசு உத்தரவு கர்நாடகத்தில் இன்று முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயக்காது?
கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயங்காது என கூறப்படுகிறது.
பெங்களூரு:
ஓலா, ஊபர்
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலம் வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓலா, ஊபர், ராபிடோ ஆகிய நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. இந்த நிலையில் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாடகை கார்களை மட்டுமே இயக்க வேண்டும் எனவும், ஆட்டோக்களை இந்த சேவையில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு என கூறி 3 நாட்களுக்குள் வாடகை ஆட்டோ சேவையை இந்த நிறுவனங்கள் கைவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், வாடகை ஆட்டோ சேவையை நிறுத்த அரசு நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. எனவே இன்று முதல் பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்கள் ஓடாது என கூறப்படுகிறது. மேலும், அரசின் இந்த உத்தரவை மீறி ஆட்டோக்கள் இயக்கப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையம் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
நிரந்தர தீர்வு
இதற்கிடையே அரசின் இந்த முடிவையடுத்து, வாடகை கட்டணத்தை ஓலா, ஊபர் நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளது. ஆனால் அந்த கட்டணம் அரசு அறிவித்த குறைந்தபட்ச கட்டணத்தைவிட கூடுதல் என பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்பு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. தற்போது ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் ரூ.70 முதல் ரூ.80 வரை கட்டணம் வசூலிக்கிறது.
ஊபர் நிறுவனம் ரூ.80 கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. ராபிடோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கிலோ மீட்டருக்கு ரூ.30 வசூலிக்கிறது. மேலும், கூடுதல் தூரத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 பெறுகிறது. ஆனால் இந்த நிறுவனம் சராசரியாக ரூ.90-ஐ வசூல் செய்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என பயணிகள் கூறி
வருகின்றனர்.