கவர்னரின் பேச்சுதான் காலாவதி ஆகிவிட்டது: அமைச்சர் துரைமுருகன்
திராவிட மாடல் கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கவர்னர் கூறியிருப்பது பற்றி கேட்டால், அவரது பேச்சுதான் காலாவதியாகிவிட்டது என்று துரைமுருகன் விமர்சனம் செய்தார்.
சென்னை,
இதற்கிடையே சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் செல்வதாக தகவல் கிடைத்து, பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-
திராவிட மாடல் கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கவர்னர் கூறியிருப்பது பற்றி கேட்டால், அவரது பேச்சுதான் காலாவதியாகிவிட்டது. பயிற்சிக்காக நீர்வளத்துறை அதிகாரியை ஜப்பானில் இருந்து அழைத்துள்ளனர். எனவே தலைமை பொறியாளரை அனுப்பி வைத்திருக்கிறேன்.
நான் அங்கு செல்லவில்லை.அமைச்சரவை மாற்றத்திற்கான அவசியம் உள்ளதா? என்று கேட்டால், அதை முதல்-அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சரவையில் மாற்றம் உள்ளது என்ற உங்கள் ஊகங்கள் சரியா? என்று பார்க்கலாம்.அமைச்சரவை மாற்றம் என்பது உலக ரகசியம் அல்ல. எனக்கு தெரிந்தால் நான் சொல்லிவிடுவேன். சென்னைக்கு வந்ததும் முதல்-அமைச்சரை போய் பார்த்தேன். காரில் அமர்ந்திருந்தார். ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைமைச் செயலகத்திற்கு வருவதாக கூறினார்.
எனவே அங்கு அவரிடம் பேசலாம் என்று தலைமைச் செயலகத்தில் இருந்தேன். ஏனென்றால், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல இடங்களில் என்னிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஆனால் அவருக்கு காலில் வலி என்பதால் தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்று போன் வந்தது. எனவே மாலையில் பார்க்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். இன்னும் அவரிடம் பேசவில்லை.