தனியார் ஆக்கிரமித்த 67 ஏக்கர் நிலத்தை மீட்க அரசுக்கு 3 மாதம் கெடு-ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் ஆக்கிரமித்த 67 ஏக்கர் நிலத்தை மீட்க அரசுக்கு 3 மாதம் கெடு விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி அருகே காஜநாயகனஹள்ளியில் கோசாலைக்கு சொந்தமான 67 ஏக்கர் நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையத்தை தனியாரிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில், ஜெயபாலரெட்டி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வரலே முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 67 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ஆனேக்கல் தாசில்தார் வழங்கிய அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். மேலும் அந்த நிலத்தை மீட்க 3 மாதம் காலஅவகாசம் வழங்கும்படி நீதிபதியிடம் அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, காஜநாயகனஹள்ளியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 67 ஏக்கர் அரசு நிலத்தையும் 3 மாதத்திற்குள் மீட்க வேண்டும் என்று கெடு விதித்து தலைமை நீதிபதி பி.பி.வரலே உத்தரவு பிறப்பித்தார்.