மனைவியின் தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை
திருமணமான 3 மாதத்தில் மனைவியின் தொல்லையால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஞானபாரதி:-
3 மாதத்தில் தற்கொலை
பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உல்லால் அருகே எம்.வி. லே-அவுட்டில் வசித்து வந்தவர் மகேஸ்வரா (வயது 24). இவரது மனைவி கவனா (21). ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த மகேஸ்வராவுக்கும், மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த கவனாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது.
திருமணமான புதிதில் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், மகேஸ்வராவுக்கு கவனா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த மகேஸ்வரா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகேஸ்வராவை மதிக்காமல் பேசி வந்ததுடன், அவரது குடும்பத்தினர் பற்றி பேசி அடிக்கடி கவனா சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மருமகளே காரணம்
இதனால் மனம் உடைந்த மகேஸ்வரா தற்கொலை முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் மகேஸ்வராவின் தாய் ரத்னம்மா புகார் அளித்துள்ளார். அதில், தனது மகனுடன் கவனா அடிக்கடி சண்டை போட்டு வந்தார். தகாத வார்த்தையில் திட்டுவது, யாருக்கும் மதிப்பளிக்காமல் பேசுவது என்று இருந்து வந்தார். நகை வாங்கி கொடுக்கும்படி மகனிடம் கேட்டு தொல்லை கொடுத்தார். நகை வாங்கி கொடுக்காததால், மகனுடன் சண்டை போட்டார். எனது மகன் சாவுக்கு கவனாவே காரணம், என்று கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டுள்ளனர். மேலும் கவனாவை பிடித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.