பரிசு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க இயலாது
பரிசு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க இயலாது என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு பரிசு பொருட்கள், கூப்பனுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி). விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில், அந்த நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பரிசு கூப்பன்கள், பரிசு பொருட்கள், ஆன்லைனில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு 'கேஸ் பேக்' ஆபர்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க கூடாது என்று வாதிட்டார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து, பரிசு பொருட்கள், 'கேஸ் பேக்', 'இ-வவுச்சர்'களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது சாத்தியமில்லை. இவை அனைத்தும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்டு வருவதில்லை. எனவே பரிசு பொருட்கள், பரிசு கூப்பன்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க இயலாது என்று நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.