குஜராத் சட்டசபை தேர்தல்; சொந்த கட்சி தோல்வி அடைய பா.ஜ.க.வில் பல தலைவர்கள் விருப்பம்: கெஜ்ரிவால் பேச்சு
குஜராத் சட்டசபை தேர்தலில் சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என பா.ஜ.க.வின் பல தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள் என கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
தரம்பூர்,
குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.
இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக குஜராத்துக்கு மீண்டும் சென்றார். அவர் தரம்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் பேசும்போது, அவர்களின் (பா.ஜ.க.) 27 ஆண்டுகால ஆணவத்தை நாங்கள் நொறுக்க போகிறோம். உங்களுக்கு என்று தொழில்கள் உள்ளன. எங்களுடன் நீங்கள் சேர்ந்து விட்டால், அவர்கள் உங்களுடைய தொழில்களை சேதப்படுத்துவார்கள்.
நீங்கள் அங்கேயே இருங்கள். ஆனால், அக்கட்சி தோல்வியடைய ரகசிய பணியாற்றுங்கள். காங்கிரஸ் தொண்டர்களும் பயப்பட வேண்டாம். உங்கள் கட்சியை விட்டு வெளியேறி ஆம் ஆத்மியில் இணையலாம் என பேசியுள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த பல தலைவர்களும், தொண்டர்களும் என்னை சந்தித்து, ஏதேனும் செய்து ஆளுங்கட்சியை தோற்கடியுங்கள் என ரகசியமுடன் கேட்டு கொண்டனர். தங்களது சொந்த கட்சி தோல்வி அடைய வேண்டும் என விரும்பும் பா.ஜ.க.வின் தலைவர்களும், தொண்டர்களும் ஆம் ஆத்மிக்காக ரகசியமான முறையில் வேலை செய்யும்படி கூறி கொள்ள விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.