பொது சிவில் சட்டம் அமல்படுத்த குழு - குஜராத் அரசு முடிவு
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைப்பது என குஜராத் மாநில பா.ஜ.க. அரசு முடிவு எடுத்துள்ளது.
பொது சிவில் சட்டம்
நாட்டின் அனைத்து மத, மொழி, இன மக்களுக்கும் ஒரே மாதிரியான, பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் பொது சிவில் சட்டம் ஒன்றை இயற்றுவதை மத்திய பா.ஜ.க. அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
ஆனால் இதைக் கொண்டு வருவதற்கு முன்பாக நாட்டின் பல்வேறு தரப்பினரிடையே, அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறது.
இன்னும் ஒன்றரை வருடத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இது குறித்த விவாதம் சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
குஜராத்தில் குழு
இந்த நிலையில் பா.ஜ.க. ஆளுகிற குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தருணத்தில் அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதை மாநில உள்துறை ராஜாங்க மந்திரி ஹர்ஷ் சங்வி, ஆமதாபாத்தில் நேற்று தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒரு குழு அமைப்பது என மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
"இந்த குழுவுக்கு ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை வகிப்பார். இதில் 3 அல்லது 4 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்" என மத்திய மந்திரி பர்சோத்தம் ரூபாலா தெரிவித்தார்.
ஏற்கனவே பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட், இமாசலபிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.