'பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தால் குஜராத்திற்கு அதிக பலன் கிடைத்துள்ளது' - முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல்
பிரதமர் மோடியின் ஆட்சியில், நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளதாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 20-ந்தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த பயணத்தின் போது இந்திய - அமெரிக்க பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். அவர்களிடம் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தால் குஜராத்திற்கு அதிக பலன் கிடைத்துள்ளது என்று குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில், நாடு அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளது.
அவரது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் மூலம், குஜராத்திற்கு அதிக பலன்கள் கிடைத்துள்ளன. அமெரிக்க நிறுவனமான மைக்ரோன் டெக்னாலஜி நிறுவனத்துடன் குஜராத் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும்" என்று தெரிவித்தார்.