'சந்திரயான் லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்' - சூரத் ஆசாமி
சந்திரயான் லேண்டரை நான்தான் வடிவமைத்ததாக சூரத் ஆசாமி ஒருவர் தெரிவித்தார்.
சூரத்,
'சந்திரயான்-3' விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி, அதன் ரோவர், ஆய்வையும் தொடங்கிவிட்டது. 'இஸ்ரோ' விஞ்ஞானிகளின் அபார சாதனையாக இது கருதப்படுகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஒருவர், 'லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்' என்று அதிரடியாக கூறியுள்ளார்.
மிதுல் திரிவேதி என்ற அந்த நபர், தான் ஆராய்ச்சி பட்டம் பெற்றிருப்பதாகவும், இஸ்ரோவில் பணிபுரிந்த விஞ்ஞானி என்றும் உள்ளூர் நிருபர்களிடம் கூறினார். லேண்டரின் அசல் வடிவமைப்பில் நான் பல மாற்றங்களை செய்தேன். அதுதான் தற்போது நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என்று சரமாரியாக 'அடித்து' விட்டார் அவர்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 'அந்த நபர், இஸ்ரோவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'நாசா'வில் பணிபுரிந்ததாகவும் சொல்கிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் அவரால் காட்ட முடியவில்லை. எங்களின் ஆரம்பகட்ட விசாரணையில், அந்த நபர் வெறும் பி.காம் பட்டம் மட்டும் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
அவர் 'இஸ்ரோ'வில் பணிபுரிந்ததாகவும், லேண்டரை வடிவமைத்ததாகவும் கூறுவது பொய் என்பது உறுதியானால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளனர்.
சந்திரயானின் லேண்டர், நிலவில் 'லேண்ட்' ஆகிவிட்டது. இந்த ஆசாமி விரைவில் சிறையில் 'லேண்ட்' ஆகப்போகிறார்.