குஜராத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மாலையுடன் நிறைவடைந்தது


குஜராத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மாலையுடன் நிறைவடைந்தது
x

குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

அகமதாபாத்,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை குஜராத் சட்டசபை தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. அங்கு 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1ம் தேதி, 5ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் இன்று மாலை வரை நடைபெற்றது. வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் போட்டியிடுகிற 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள். அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற இந்த சூரத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி ஓட்டு வேட்டையாடினார். அவர் சூரத் விமான நிலையத்தில் இருந்து மோட்டா வரச்சா என்ற இடம் வரையில் 25 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட வாகன பேரணி (ரோடு ஷோ) நடத்தி ஆதரவு திரட்டினார்.

காங்கிரசுக்காக சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், பாலிடானா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். ஆம் ஆத்மிக்காக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சூரத்தில் முற்றுகையிட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அங்கு ஜவுளித்தொழில் அதிபர்கள் மற்றும் ரத்தினக்கல் கைவினைஞர்களுடன் டவுன்ஹால் சந்திப்புகளை நடத்தி தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார்.

இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.


Next Story