குஜராத்தில் அதிகனமழையால் 14 பேர் பலி


குஜராத்தில் அதிகனமழையால் 14 பேர் பலி
x

Image Courtacy: PTI

குஜராத்தில் அதிகனமழை காரணமாக 14 பேர் பலியாகி உள்ளனர்.

ஆமதாபாத்,

குஜராத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகனமழையில் 14 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 31 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒருமாத காலமாக விட்டு விட்டு பெய்துவரும் தொடர் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகனமழையால் 14 பேர் பலியாகியுள்ளனர். தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் முதல் ஏராளமான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 31 ஆயிரத்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு அணிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாநில பேரிடர் மேலாண்மை மந்திரி ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் உடனடியாக ஆய்வை மேற்கொண்டு மக்களுக்கு தாமதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழையால் பல அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மாநிலத்திலேயே பெரிய அணையான சர்தார் சரோவர், 48 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளது.

இதற்கிடையில் கனமழை காரணமாக, ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவின் குஜராத் பயணம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. அவர் நேற்று அங்கு சென்று ஆதரவு திரட்டுவதாக இருந்தார்.


Next Story