அரியானா: வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து துப்பாக்கியால் சுட்ட காதலன்..!
அரியானாவில் வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணை காதலன் வழிமறித்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
குருகிராம்,
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஐஎம்டி மனேசர் பகுதியில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணை சுட்டார்.
இதனால், அப்பெண் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அந்த நபர், தான் வைத்திருந்த பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கு நின்றிருந்த மற்றொரு பைக்கை எடுத்து அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் நிலைமை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். தோட்டா தோளில் பாய்ந்ததால், அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பள்ளி பருவ தோழர்கள் என்பதால் இது காதல் விவகாரமாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி மீது வழக்குப்பதியு செய்த போலீசார், குற்றவாளியை தேடி வருகின்றனர்.