ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்-மந்திரி பதவி ஆசைகாட்டி பாஜக ஏமாற்றியது - சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்
ஷிண்டேவுக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்படும் என பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் தற்போது கலகம் செய்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி என கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. சிவசேனா தனது கொள்கைகளுக்கு முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சமன் செய்தித்தாளில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர் கூறியிருப்பதாவது:-
ஷிண்டேவுக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்படும் என பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவர் தற்போது கலகம் செய்துள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியில், பாஜக சென்ன வார்த்தையை காப்பாற்றியிருந்தால், ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாகி இருந்திருக்கக்கூடும். ஆனால், தேவேந்திர பட்னாவிஸ் அப்பதவியை வகித்தார், அவர் முதல்வர் நாற்காலியை விட்டுத்தரவில்லை.
ஷிண்டேவுக்கு துரோகம் செய்தது பாஜக தான். இதை தெரிந்திருந்தும் இப்போதைய சூழலில் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே பாஜகவை நம்பி அவர்களுடன் சேர திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.