வாக்காளர்களுக்கு வழங்க இருந்தரூ.55 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல்


வாக்காளர்களுக்கு வழங்க இருந்தரூ.55 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2023 10:00 AM IST (Updated: 25 March 2023 10:01 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் கொண்டு வந்த ரூ.55 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் கொண்டு வந்த ரூ.55 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தீவிர வாகன சோதனை

கர்நாடகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க அரசு அதிகாரிகள், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவமொக்கா மாவட்ட எல்லைகளில் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் குறிப்பாக 5 சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சேலைகள், பரிசு பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.

பரிசு பொருட்கள் பறிமுதல்

அதன்படி கடந்த 22-ந் தேதி ஆகும்பே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் லாரியில் கொண்டுவரப்பட்ட ரூ.29.70 லட்சம் மதிப்பிலான குக்கர்களை போலீசார் கைப்பற்றினர். அதேபோல் அன்றைய தினம் வினோபா நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான 30 டன் பருப்பு, ரவை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய 1,000 உணவு பொருட்கள் தொகுப்புகளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் கோட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலா 50 கிலோ எடை கொண்ட 404 அரிசி மூட்டைகள், தொட்டபேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சேலைகள், வேட்டிகள், இட்லி குக்கர்கள், வாக்காளர்களுக்கு வழங்க கடத்தி வரப்பட்ட ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மது பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசார் மொத்தம் ரூ.54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான பரிசு பொருட்களை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story