விரைவில் கைது செய்யவேண்டும் - மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வைரலாகும் ஹேஷ்டேக்
ஹல்த்வானி வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம், ஹல்த்வானி பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் கடந்த வாரம் அகற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பன்புல்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மசூதி மற்றும் மதரசா இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. பின்னர் வன்முறையாக மாறியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர்.
வன்முறையைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பன்புல்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஓரளவு பதற்றம் தணிந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை சட்டத்தின் வரம்பிற்குள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், ஹல்த்வானியில் இதுவரை இல்லாத அளவில் வகுப்புவாத வன்முறை மற்றும் பதற்றம் உருவானதற்கு மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங்கின் நடவடிக்கைதான் காரணம் என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
அத்துடன், மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங்கை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கூறி எக்ஸ் தளத்தில் இன்று பலரும் ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர். 20 ஆண்டுகள் பழமையான மசூதியை இடித்ததற்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
அதேசமயம், சிலர் ஆட்சியருக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுத்ததாக ஆட்சியை பாராட்டி உள்ளனர். சட்டவிரோதமாக வசிக்கும் நபர்களிடம் இருந்து ஹல்த்வானியை விடுவிப்பதற்கு வந்தனா சிங் போன்ற நிர்வாகி தேவை என்று ஒருவர் கூறியிருக்கிறார்.