ரூ.10½ கோடி நகைகள், வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
பெங்களூரு ஒயிட்பீல்டு மண்டல போலீசாரால் கடந்த ஒரு ஆண்டாக திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10½ கோடி மதிப்பிலான நகைகள், வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பெங்களுரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பங்கேற்றார்.
ஒயிட்பீல்டு:-
ரூ.10.36 கோடி மதிப்பு
பெங்களூரு ஒயிட்பீல்டு மண்டலத்திற்கு உட்பட்ட ஒயிட்பீல்டு, காடுகோடி, மகாதேவபுரா, கே.ஆர்.புரம், மாரத்தஹள்ளி, எச்.ஏ.எல்., பெல்லந்தூர், வர்த்தூர் ஆகிய போலீஸ் நிலைய போலீசாரால் கடந்த ஒரு ஆண்டாக திருட்டு, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ 787 கிராம் தங்கநகைகள்.
ரூ.4.44 லட்சம் மதிப்பிலான 4 கிலோ வெள்ளி, ரூ.24 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், ரூ.62.40 லட்சம் மதிப்பிலான 900 செல்போன்கள், ரூ.2 கோடி 37 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான 100 மடிக்கணினிகள், 313 இருசக்கர வாகனங்கள், 15 கார்கள், ஒரு பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10.36 கோடி ஆகும்.
இணைந்து செயல்பட வேண்டும்
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எச்.ஏ.எல். போலீஸ் நிலையம் அருகே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கலந்து கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். பின்னர் உரியவர்களிடம் அவர் வழங்கினார்.
பின்னர் போலீசாரை பாராட்டி அவர் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதாப் ரெட்டி பேசுகையில் கூறியதாவது:-
அவசர புகார்களை அளிக்க போலீஸ் நிலையம் சென்று மக்கள் நேரத்தை வீணடிக்காமல் 112 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அந்த எண்ணுக்கு அழைத்து கூறினாலும் புகார் உடனடியாக பதிவு செய்யப்படும். தற்போது ஆன்லைன் பணமோசடி அதிகரித்து உள்ளது. செல்போன் மூலம் லாட்டரி பரிசு விழுந்து உள்ளது என்று மர்மநபர்கள் கூறுவதை நம்ப வேண்டாம்.
கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்படும் வீடுகளுக்கு உரிமையாளர்கள் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது இல்லை. குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் நல்லது. குற்றங்கள் நடப்பதை தடுக்க போலீசாருடன், பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.