தேசியக் கொடி விற்பனையால் ரூ.500 கோடி வருவாய்- அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு தகவல்
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இதனிடையே மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றியதை புகைப்படம் எடுத்தும், தேசிய கொடியுடன் 'செல்பி' புகைப்படம் எடுத்தும் 'ஹர் கர் திரங்கா' என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி மத்திய கலாசார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அந்த வகையில் நேற்று மாலை நிலவரப்படி 6 கோடிக்கும் அதிகமான 'செல்பி' புகைப்படங்கள் 'ஹர் கர் திரங்கா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், சுமார் 30 கோடி தேசியக் கொடிகள் விற்பனையானது என்றும் இதனால், சுமார் ரூ.500 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.