ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வை தாக்க முயன்று கைதானவரின் வீ்ட்டில் போலீசார் திடீர் சோதனை
ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வை தாக்க முயன்று கைதானவரின் வீ்ட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில் ஆயுதங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹரீஷ் பூஞ்சா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காரில் பண்ட்வாலில் இருந்து பெல்தங்கடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த நபர், தகாத வார்த்தைகளால் திட்டி ஆயுதங்களை காண்பித்து ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின்பேரில் பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்னிர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்(வயது 38) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கைதான ரியாசின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் 2 செல்போன்கனை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் பா.ஜனதா மாநில தலைவர், நளின் குமார் கட்டீல், இந்த சம்பவத்தை இலகுவாக எடுத்து கொள்ளக் கூடாது என்றார். மேலும் மந்திரி எஸ்.அங்கார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கடலோரப் பகுதியில் அமைதியை சீர்குலைக்க ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.