"ஜிலேபி பாபா" 120 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த சாமியார்
120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என அரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பதேஹாபாத்
அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. இவர் மீது பதேஹாபாத் கோர்ட்டில் பல்வேறு பாலியல் ரீதியிலான வழக்குகள் இருந்தன. அதன்மீதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து அவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, அவரின் குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின.
சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோஹானாவின் ரெயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்தனர். ஜிலேபி பாபாவாக மாறி, அதன்பின் பாலியல் குற்றவாளியாக மாறிய கதை அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தக்கூடியது.
ஜிலேபி பாபா குறித்து போலீசார் கூறியதாவது:-
ஜிலேபி பாபா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன்பு அவருக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அதாவது, அந்த பெண்கள் மீது ஆவி புகுந்திருப்பதாக கூறி பயத்தின் காரணமாக, அவர்களை சூனிய பூஜைகளில் சுய விருப்பத்துடன் கலந்து கொள்ள வைக்கிறார்.
தந்திர வித்யா சடங்குகளின் போது, அவர் அவர்களை மயக்கமடையச் செய்து, பின்னர் அவர்களை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தார். அதுமட்டுமின்றி, வீடியோக்களை கசியவிட்டு விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஜிலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் ஆபாச வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
சோதனையின் போது அவரது அறையில் இருந்து போதை மாத்திரைகள், பூஜை பொருள்களை போலீசார் கைப்பற்றினர்.