குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறியதுடன் சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது


குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறியதுடன்  சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது
x

பெங்களூருவில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறியதுடன், சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.34½ லட்சம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறியதுடன், சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.34½ லட்சம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி...

பெங்களூரு கொடிகேஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் இந்திராநகரை சேர்ந்த தர்வீன் தாஸ் என்ற மோகன் தாஸ், இவரது மனைவி தனுஷ்கா என்று தெரிந்தது. இந்திராநகரில் உள்ள ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் சினேகா பாகவத்துடன் தனுஷ்காவுக்கு அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது தனது கணவர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாக சினேகாவிடம் தனுஷ்கா கூறி இருக்கிறார். விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரும் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை குறைந்த விலைக்கு தனது கணவர் விற்பனை செய்வதாகவும், அதனை நீங்களும் வாங்கி கொள்ளுங்கள் என்றும் சினேகாவிடம் தனுஷ்கா கூறியுள்ளார்.

ரூ.34½ லட்சம் பறிமுதல்

இதையடுத்து, சினேகாவும் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கும் ஆசையில் ரூ.68 லட்சத்தை குறிப்பிட்ட இடைவெளியில் தனுஷ்காவிடம் கொடுத்துள்ளார். ஆனால் தங்கத்தையும் கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் தனுஷ்காவும், அவரது கணவர் தர்வீன் தாசும் மோசடி செய்துள்ளனர். இதுபற்றி கொடிகேஹள்ளி போலீசில் சினேகா கொடுத்த புகாரின் பேரில் தம்பதியை கைது செய்திருந்தார்கள்.

சினேகா தவிர ஏராளமான பொதுமக்களிடம் அந்த தம்பதி தாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் என்றுக்கூறி மோசடி செய்தது தெரிந்தது. கைதான தம்பதியிடம் இருந்து ரூ.34½ லட்சம், 107 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான தம்பதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story