கர்நாடகத்தில் முதன்முறையாக கலபுரகியில் சுகாதார ஏ.டி.எம். வசதி
கர்நாடகத்தில் முதன்முறையாக கலபுரகியில் சுகாதார ஏ.டி.எம். வசதி தொடங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் உடல் பரிசோதனை அறிக்கை தருகிறது.
கலபுரகி:-
ஏ.டி.எம். எந்திரங்கள்...
இன்றைய நவீன உலகில் எந்திர தனமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் காலத்தை சிக்கனப்படுத்த பல எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பணப்பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம். எந்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். மேலும் பால், இட்லி தரும் ஏ.டி.எம். எந்திரங்களையும் பெங்களூருவில் பார்த்திருக்கிறோம்.
இது என்ன சுகாதார ஏ.டி.எம். வசதி என்கிறீர்களா....? ஆம் நமது உடலில் உள்ள ரத்தம், சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு, எடை அளவு, உயரம் மற்றும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்்சல் அறிகுறியை கண்டுபிடிக்க இந்த சுகாதார ஏ.டி.எம். வசதி உதவுகிறது.
25 இடங்களில்...
இந்த ஏ.டி.எம். வசதி கர்நாடக மாநிலம் கலபுரகியில் கல்யாண கர்நாடக உற்சவ தினத்தையொட்டி (கல்யாண-கர்நாடக பகுதி உதயமான தினம்) செப்டம்பர் 17-ந்தேதி முதல்-மந்திரி சித்தராமையா இந்த சுகாதா ஏ.டி.எம். வசதியை தொடங்கிவைத்தார். கலபுரகி மாவட்டத்தில் 25 இடங்களில் இந்த ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்பட்டு வருகிறது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஹீமோகுளோபின் அளவு, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா பற்றிய அறிகுறி அறிக்கை, உயரம், எடை, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை இந்த ஏ.டி.எம். எந்திரம் பார்த்து 10 நிமிடத்தில் தந்துவிடும். மேலும் இ.சி.ஜி. (இதய துடிப்பு பற்றிய ஆய்வு) அறிக்கையையும் இந்த எந்திரம் தருகிறது.
சேவை இலவசம்
ஒரு தனியார் நிறுவனம் ரூ.5 கோடி செலவில் 25 சுகாதார ஏ.டி.எம்.களை கலபுரகி மாவட்ட சுகாதாரத்துறைக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து மாநிலத்திலேயே முதன்முறையாக இந்த சுகாதார ஏ.டி.எம்.களை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இந்த எந்திரங்களை பராமரிக்க லேப்-டெக்னீசியன்களும் ஒவ்வொரு சுகாதார ஏ.டி.எம். மையத்திலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த சுகாதார ஏ.டி.எம். மைய சேவைக்கு கட்டணம் இல்லை. இலவசமாக இந்த சேவையை பெறலாம். யார் வேண்டுமானாலும் தனது உடல் நிலையை பரிசோதித்து கொள்ளலாம். இந்த வகை ஏ.டி.எம். மையத்தில் அனைத்து சோதனைகளையும் நாம் செய்ய வேண்டியதில்லை.
செல்போனுக்கு அறிக்கை
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகளை லேப்-டெக்னீசியன்கள் மேற்கொள்வார்கள். ஆக்சிஜன் அளவு, உயரம், எடை உள்ளிட்ட சில சோதனைகளை நாமே செய்து கொள்ளலாம். அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு நமது செல்போன் வாட்ஸ்-அப்புக்கு பரிசோதனை அறிக்கை 10 நிமிடத்தில் வந்துவிடும். இந்த சுகாதார ஏ.டி.எம். வசதி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.