சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேரில் ஆய்வு: 'விம்ஸ்' ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகள் பணி இடைநீக்கம்?-கா்நாடக அரசு முடிவு


சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேரில் ஆய்வு:  விம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகள் பணி இடைநீக்கம்?-கா்நாடக அரசு முடிவு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி விம்ஸ் ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் ஆய்வு செய்த நிலையில், மருத்துவ அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

3 பேர் உயிரிழந்தனர்

பல்லாரியில் விஜயநகர் மருத்துவ அறிவியல் கல்லூரி (விம்ஸ்) ஆஸ்பத்திரி உள்ளது. அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 13-ந் தேதி இரவு திடீரென மின்சார வினியோகம் நின்றுபோனது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதில் முல்லா உசேன், சங்கரம்மா, சீத்தம்மா ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து கர்நாடக சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பிரச்சினை கிளப்பி பேசினார். இதுகுறித்துக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அரசு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதற்கிடையே சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று விம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவம் நடந்த தீவிர சிகிச்சை பிரிவு வார்டு மற்றும் மின்சார வினியோகம் செய்யும் மையம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். இதில் பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரி ஸ்ரீராமுலுவும் கலந்து கொண்டார்.

பணி இடைநீக்கம்

மேலும் விசாரணை குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது. அதில் மருத்துவ அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டால், அவர்களை மொத்தமாக பணி இடைநீக்கம் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவ அதிகாரிகள் இடையே கோஷ்டி பூசல் நிலவுவதாகவும், அதில் ஒரு தரப்பு அதிகாரியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்னொரு தரப்பினர் திட்டமிட்டு மின் வினியோகத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த கோஷ்டி பூசல் காரணமாக அன்றைய தினம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் மின்சாரத்தை சிலர் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.


Next Story