பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை


பெங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை
x

கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடகத்தில் ஆகஸ்டு மாதத்தில் மழை வெளுத்து வாங்கும். ஆகஸ்டு மாதத்தில் மட்டும் சராசரியாக 211 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாநிலத்தில் ஆகஸ்டு மாதத்தில் 58 மில்லி மீட்டர் மழையே பதிவாகி இருந்தது.

வழக்கத்துக்கு மாறாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. கோடை காலம் போலவே வெயில் சுட்டெரித்து வந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். வெயிலின் உஷ்ணத்தாலும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது.

நகரில் 90 டிகிரிக்கு மேலாக வெயில் பதிவாகி வந்தது. இந்த நிலையில் நேற்று பகலிலும் கடுமையான வெயில் சுட்டெரித்தது. நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக தொடங்கிய மழை, சிறிது நேரத்தில் தீவிரம் அடைந்து வெளுத்து வாங்கியது. நகரில் ராஜாஜிநகர், மல்லேசுவரம், சாந்திநகர், மெஜஸ்டிக், ஜெயநகர், மகாலட்சுமி லே-அவுட், காடுகோடி, கே.ஆர்.புரம், இந்திராநகர், பீனியா, எச்.எஸ்.ஆர். லே-அவுட், பெல்லந்தூர், பத்மநாபநகர், பையப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1½ மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கச்சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.

மல்லேசுவரம் பகுதியில் உள்ள ராகேவந்திரா மடத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மகாலட்சுமி லே-அவுட்டில் மழை வெள்ளத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மூழ்கின. மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இந்த திடீர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.


Next Story