மைசூருவில் கொட்டித்தீர்த்த கனமழை
மைசூருவில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மைசூரு:
மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மைசூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் குடிநீருடன், சாக்கடை கழிவு நீர் கலந்து சாலையில் ஓடியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இதனால் மக்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். இதையடுத்து மீண்டும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அந்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் கடல் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டானது. மேலும் வாகன ஓடிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த மழையின் காரணமாக மைசூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் விளைபயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.