கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 26 July 2023 11:00 AM IST (Updated: 26 July 2023 11:00 AM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக கேரளா முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

இன்று எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.5 மீட்டர் முதல் 2.9 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லச்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு இன்று காலை வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.


Next Story