கேரளாவின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை !
கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு,
வட கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த வார தொடக்கத்தில் இருந்து காசர்கோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தேஜஸ்வினி மற்றும் மதுவாஹினி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கூடலூர் மற்றும் நாடுகாணி பகுதியில் கனமழை பெய்து வருவதால் புன்னப்புழா, காரக்கோடன், களக்கான் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மலப்புரம் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி நகரில் காவிலும்பாறையில் பெய்த கனமழை மற்றும் காற்றில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சாலியாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மலபார் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாநிலத்தில் உள்ள இடுக்கி, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.