பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை


பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை
x

பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரு:-

கொட்டி தீர்த்த கனமழை

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் ராஜாஜிநகர், சிவாஜிநகர், கே.ஆர்.புரம், பசவனகுடி, ஜே.பி.நகர் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணி முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பசவனகுடி ஆர்.வி.சாலையில் கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஜே.பி.நகர் பகுதிகளில் கொட்டிய கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் கூரையில் இருந்து அருவி போல் மழைநீர் கொட்டியது. ெரயில் பயணிகள், அதை வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அடுத்த 5 நாட்கள்...

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல் வங்கதேசம்-மியான்மர் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூருவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை(இன்று) முதல் மே 13-ந் தேதி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். சிவமொக்கா, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, குடகு, மைசூரு மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோலார், விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story